தேனி: தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களுள் ஒருவர் விஜய். சமீபகாலமாக விஜயின், மேடைப்பேச்சுகள், செயல்பாடுகள் போன்றவை மிகவும் பிரபலமாகி வருகிறது. இந்நிலையில் நாளை (ஜூன் 22) நடிகர் விஜய் தனது 49வது பிறந்தநாளைக் கொண்டாட உள்ளார்.
அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக விஜய் ரசிகர் மன்றம் மற்றும் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். அதில் நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் எனத் தளபதி விஜய் மக்கள் இயக்கம் மற்றும் அவரது ரசிகர்களின் விருப்பம் அதில் குறிப்பிடம் வாசகங்கள் மூலம் தெரிய வருகிறது.
மேலும் அவர்களின் விருப்பத்தை நடிகர் விஜய்க்கு தெரிவிக்கும் விதமாகத் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என விஜய் ரசிகர் மன்றத்தினர் சார்பாக போஸ்டர்கள் ஒட்டும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு, சென்னை அடுத்த நீலாங்கரையில் 10 மற்றும் 12 ஆம் பொதுத்தேர்வில் சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகளுக்கு நடிகர் விஜய் 12 மணி நேரத்திற்கு மேலாகப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். விஜய் அரசியலுக்கு வர உள்ளதால் தான் இது போன்ற நிகழ்ச்சிகள் அவர் நடத்துவதாக அரசியல் விமர்சகர்கள் சார்பில் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
மேலும், அந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய், விழாவில் பங்கேற்ற மாணவர்களுக்கு, தேர்தல் குறித்து அறிவுரை கூறியது. குறிப்பாக, "நம் விரலை வைத்து நம் கண்களையே குத்துவது தான் தற்போது நடக்கிறது, உங்கள் பெற்றோரிடம் பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடாதீர்கள் என்று கூறுங்கள்" என்று கூறியது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியது.
இந்நிலையில் நாளை விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. குறிப்பாக நகரில் முக்கிய பகுதியில், தேனி மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் இளைஞர் அணி தலைவர் பிரகாஷ் சார்பில் ஒட்டப்பட்டிருந்த இந்த போஸ்டர்களில் நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பது போன்ற வாசகங்கள் குறிப்பிட்டு இருந்தது.
அவை "மாணவர்கள் நினைத்தால் மாற்றம் வரும், நீங்கள் முடிவெடுத்தால் 2026ல் 234 தொகுதிகளிலும் ஏழைகளுக்கு ஏற்றம் வரும்" என்றும். "எங்கள் ஓட்டுக்கு value இருக்கனும் அதுக்கு எங்கள் தலைவரே(விஜய்) களத்தில் நிற்க வேண்டும்" என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் இடம் பெற்றிருந்தன.
இதையும் படிங்க: நாளைய முதலமைச்சரே - நெல்லையில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் சலசலப்பு