பெரியகுளம்: தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தேனி அருகே உள்ள கானாவிளக்கு பகுதியில் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் தேனி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் பல்வேறு சிகிச்சைக்காக வருகை தருகின்றனர்.
இந்த நிலையில் தேனி அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் கேண்டினுக்கு குடிநீர் இணைப்பு பெறுவதற்காக தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மீனாட்சி சுந்தரத்திற்கு, 20 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுப்பது போல் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் உணவகம் மற்றும் கேண்டினை மாரிச்சாமி என்பவர் நடத்தி வருகிறார். ஒவ்வொரு வருடமும் இந்த உணவகம் மற்றும் கேண்டின் டெண்டர் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டு வருவது வழக்கம்.
அந்த வகையில், கடந்த 12 ஆண்டுகளாக மாரிச்சாமி என்பவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கேண்டின் நடத்தி வருகிறார். மேலும், இந்தக் கேண்டின்கு தேவையான குடிநீர் மருத்துவமனையில் இருந்து பெற்று வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மீனாட்சி சுந்தரம் இந்த கேண்டினுக்கு கொடுக்கப்பட்டுள்ள மூன்று குடிநீர் இணைப்புகளையும் துண்டிக்குமாறு உத்தரவிட்டதாகவும், அதை தொடர்ந்து மூன்று குடிநீர் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் குடிநீர் இல்லாத நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக நாள்தோறும் 6 ஆயிரம் ரூபாய் கொடுத்து குடிநீர் பெற்று உணவகத்தை நடத்தி வந்தாகவும், தொடர்ந்து குடிநீர் இணைப்பு கிடைக்காததால் உணவகத்தை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதாகவும் கூறப்படிகிறது.
மேலும் இதுகுறித்து, தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மீனாட்சி சுந்தரத்தை சந்தித்து குடிநீர் இணைப்பு ஏற்படுத்தி தர கோரி மனு அளித்தபோது, அவர் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகவும், அதனைத் தொடர்ந்து மாரிச்சாமி 16 லட்சம் ரூபாய் பணம் கொடுப்பதாக கூறிய நிலையில் அதற்கு மீனாட்சிசுந்தரம் சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து மாரிச்சாமி தனது நண்பர்கள் மூலமாக மீனாட்சி சுந்தரத்தை அவரது அலுவலகத்தில் சந்தித்து முதல் கட்டமாக ஆறரை லட்ச ரூபாயும் அடுத்து இரண்டு நாட்கள் கழித்து மூன்றரை லட்ச ரூபாய் என பத்து லட்ச ரூபாய் லஞ்சம் கொடுத்ததாகவும், மீதமுள்ள தொகையான ஆறு லட்ச ரூபாய் லஞப் பணத்தைக் கல்லூரி வளாகத்தில் உள்ள கல்லூரி முதல்வரின் குடியிருப்புக்கு சென்று கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், கல்லூரி முதல்வர் கேட்ட பணம் கொடுத்த நிலையில் தங்களுக்கு மீண்டும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என எதிர்பார்த்து காத்திருந்த போது மூன்று இணைப்புக்கு பதிலாக ஒரே ஒரு இணைப்பை மட்டுமே உணவகத்திற்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து மாரிசாமி கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, மீதமுள்ள இரண்டு குடிநீர் இணைப்பு வழங்கவும், உணவகத்திற்கு கொடுக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் இடத்தை பயன்படுத்தி வருவதாகவும் அதனை அகற்றாமல் இருப்பதற்கும் என மேலும் 10 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று பேரம் பேசியதாக கூறப்படுகிறது.
தற்போது இந்த சம்பவம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மீனாட்சி சுந்தரத்திடம் லஞப்பணம் கொடுப்பது போன்ற வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து ஈடிவி பாரத்திற்கு தேனி மருத்துவ கல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரம் அளித்துள்ள விளக்கத்தில், "வீடியோவில் இருப்பது உண்மைக்கு புறம்பான ஒன்று. அவர் உணவகத்தை சட்டத்திற்கு புறம்பாக நடத்தி வருகிறார். என்னை மிரட்டி மேலும் மூன்று வருடத்திற்கு கேண்டினை நடத்த நீட்டிப்பு கேட்டும், கேண்டினுக்கு தேவையான தண்ணீரை அளவுக்கு அதிகமாக எடுத்தும் வருகிறார்.
மேலும், கடந்த 3 ஆண்டுகளாக ஆயிரத்து 400 சதுர அடிக்கு வாடகை கொடுத்து விட்டு 3 ஆயிரம் சதுர அடி ஆக்கிரமிப்பு செய்து கடை நடத்தி வருகிறார். அதை சட்டபூர்வமாக மாற்றி கொடுக்கச் சொன்னார். அதை நான் மறுத்துவிட்டேன். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை என்ற புகார்கள் எங்களுக்கு வந்தது.
நாங்கள் அதை சோதனை செய்ததில் மாரிச்சாமி எங்களுக்கு தெரியாமல் எங்கள் தண்ணீர் தொட்டியில் மோட்டார் அமைத்து திருட்டுத்தனமாக அதிக அளவில் தண்ணீர் எடுத்தது தெரியவந்தது. தற்போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடத்தில் கட்டிடம் கட்டி இருந்ததால் அதை அகற்றினால் தான் தண்ணீர் கொடுக்கப்படும் என்று தண்ணீர் இனைப்பை துண்டித்து உள்ளோம்.
நான் பணம் பெற்று இருந்தால் அவருக்கு தேவையானதை நான் செய்து கொடுத்து இருந்து இருப்பேன். என் மீது பொய்யான வீடியோ வெளியிட்டுள்ளதால் அவர் மீது இரண்டு கோடி கேட்டு மான நஷ்ட ஈடு வழக்கு தொடர உள்ளேன்" என கூறினார்.
இதையும் படிங்க: வெங்கட் பிரபு தந்த புது அப்டேட்