தேனி: பாரதிய ஜனதாவின் சிறுபான்மை நல அமைப்பின் மாநில பொறுப்பாளர் வேலூர் இப்ராஹிம் பாஜகவின் 9 ஆண்டு சாதனை விளக்க நிகழ்ச்சிக்காக நேற்று (ஜூலை 7) தேனி மாவட்டம் கம்பம் வந்தார். கட்சியை பலப்படுத்தும் நோக்கில் அவர் கம்பம் நகரில் உள்ள பல்வேறு சமுதாய அமைப்புகளின் முக்கிய தலைவர்களை சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது சமுதாய தலைவர்களிடம் மோடி அரசின் ஒன்பது ஆண்டுகால சிறப்பு பற்றியும், அதற்கு தங்களுடைய ஆதரவு எப்பொழுது வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தார். இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதாவின் மாவட்டத் தலைவர் பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் என ஏராளமானோர் உடன் இருந்தனர்.
பின்னர் வேலூர் இப்ராஹிம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கடந்த 9 ஆண்டுகளில் நரேந்திர மோடி அரசு செய்த நல்ல திட்டங்களையும், அதன் பயனாளிகளையும் சந்தித்து விளக்கம் அளிப்பதற்காகவே இந்த நிகழ்வை பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நடத்திக் கொண்டிருக்கிறோம். தேனி மாவட்டம் கம்பம், உத்தமபாளையம் ஆகிய பகுதிகளில் அறியாமையில் உள்ள இஸ்லாமிய இளைஞர்களை எஸ்டிபிஐ மற்றும் தமுமுக போன்ற அமைப்புகள் மூளைச்சலவை செய்து வன்முறையில் ஈடுபட செய்கின்றனர். இதனை பாரதிய ஜனதா கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு என்று நரேந்திர மோடி அரசு ரூபாய் 313 கோடி ஒதுக்கி உள்ளது. ஆனால் தமிழக ஸ்டாலின் அரசு, மோடி அரசுக்கு களங்கம் ஏற்படுத்தவே அவற்றை செயல்படுத்தாமல் வைத்துள்ளது. நான் எங்கு சென்றாலும் என்னை எந்த ஒரு செயலும் செய்ய விடாமல் வலைத்தளங்களில் ஒரு சில சமூக விரோதிகள் பரப்பும் செயலை நம்பி காவல் துறையினர் எனக்கு பல கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர்.
ஆனால் காவல்துறையினர்கள் வதந்திகளை பரப்புவர்களை கைது செய்ய வேண்டும், அவ்வாறு செய்யாமல் விட்டால் சமூக விரோதிகள் எளிதில் வளர்ச்சி அடைந்து விடுவார்கள். நான் இதுவரை ஆயிரம் கூட்டங்களுக்கு மேல் சிறப்புரை ஆற்றியுள்ளேன் இதுவரைக்கும் என் மேல் எந்த ஒரு வழக்குகளும் இல்லை. ஆனால் எஸ்டிபிஐ, தமுமுக போன்ற அமைப்புகள் மேல் ஆயிரம் வழக்குகள் உள்ளது.
எங்கள் தலைவர் அண்ணாமலை கூறியது போல் ஒவ்வொரு மாதமும் இரண்டு நாட்கள் தேனி மாவட்டத்திற்கு வருகை தந்து மோடி அரசின் சிறப்புகளை மக்கள் மத்தியில் எடுத்துரைத்து, வருகின்ற வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 25 தொகுதிகளில் பாரதிய ஜனதா வெற்றி பெற வைப்போம்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜி கைது.. டிஐஜி விஜயகுமார் தற்கொலை.. சந்தேகத்தை கிளப்பும் அண்ணாமலை..!