தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ளது வைகை அணை. 71 அடி நீர்த்தேக்க கொள்ளளவு கொண்ட இந்த வைகை அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் தண்ணீர் தேவை பூர்த்திசெய்கிறது.
மூல வைகை ஆறு, முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரே அணையின் முக்கிய நீர்ப்பிடிப்புப் பகுதிகள். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பெய்த கனமழையால் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்பட்ட தொடர் நீரின் காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் 60 அடியை எட்டியது.
எனினும் மூல வைகை ஆற்றில் மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் அதன் முழுக்கொள்ளளவை எட்டுவதில் தொய்வு ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் வடகிழக்குப் பருவமழை தற்போது தீவிரமடையத் தொடங்கியுள்ளது. இதனால் வைகையின் முக்கிய நீர்ப்பிடிப்புப் பகுதியான வெள்ளிமலை வனப்பகுதியில் கனமழை பெய்து நீண்ட மாதங்களுக்கு பிறகு மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெள்ளிமலை, வாலிப்பாறை, வருசநாடு, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு, கண்டமனூர், அம்மச்சியாபுரம் உள்ளிட்ட வைகை கரையோரங்களில் இரு புறங்களிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துச் செல்கிறது.
மேலும் முல்லைப் பெரியாறு, கொட்டக்குடி ஆறு உள்ளிட்ட ஆறுகளிலிருந்து வரும் தண்ணீரால் வைகை அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 10 ஆயிரத்து 886 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் நேற்று காலையில் 49.74அடியாக இருந்த வைகை அணை, இன்று ஒரே நாளில் 3 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 52.82அடியாகவும், நீர் இருப்பு 2385மி.கன அடியாக இருக்கிறது. அணையிலிருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசன பகுதிகளுக்காக 2019கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
பல மாதங்களுக்கு பிறகு மூல வைகை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் கரையோரப் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: தேனியில் கனமழை: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2அடி உயர்வு