வைகை அணை. தேனி, மதுரை, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய 5மாவட்டங்களின் முக்கிய நீராதாராமாகத் திகழ்ந்து வருகிறது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள வைகை அணையின் நீர் மட்டம் 71அடி ஆகும்.
வடகிழக்கு பருவமழை தொடங்கி மாவட்டம் முழுவதும் கனமழை பெய்துவருகிறது, இதனைத் தொடர்ந்து மூல வைகையாற்று பகுதியான வருசநாடு, வெள்ளிமலை, அரசரடி உள்ளிட்ட இடங்களில் பெய்த மழையால் மூல வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகமாகியுள்ளது.
இதனால் வைகை அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 65.55 அடியாக உள்ளது. அணையின் நீர்இருப்பு 4753 மி.கன அடியாகவும், நீர்வெளியேற்றம் 360 கன அடியாகவும் இருக்கிறது.
இந்நிலையில் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 2992 கன அடியாக இருப்பதால், இன்று வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 5 மாவட்டங்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படவுள்ளதாக பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அணையின் நீர் மட்டம் 68.5 அடியாக உயரும் போது 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 69அடி என உயரும் போது மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். பின்னர் அணைக்கு வருகின்ற நீர் 7 பெரிய மதகுகள் வழியாக வெளியேற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டும் வைகை அணை நிரம்பி வருவதால் 5 மாவட்ட மக்கள், விவசாயிகள் என அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: பவானி சாகர் அணையில் வெள்ளபெருக்கு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!