தேனி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடர் மழையால் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இவற்றில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள வெள்ளிமலை, மேகமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் மழையால் மூலவைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது.
மேலும், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு கணிசமாக அதிகரித்ததால், வைகை அணையின் நீர்மட்டம் நேற்று (ஜனவரி 15) 66அடியை எட்டியது. இதனால், கரையோர பகுதி மக்களுக்கு நேற்று முன்தினம் (ஜன. 14) முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அணையின் நீர்மட்டம் மேலும் அதிகரித்து நேற்றிரவு 9 மணியளவில் 68.50அடியை எட்டியது. இதனால், தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட கரையோர மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
71அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர் மட்டம் 69அடியை எட்டியதும் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு பாதுகாப்பு கருதி அணையின் மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட இருப்பதால் கரையோர மக்கள் பாதுகாப்புடன் இருக்க பொதுப்பணித் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று (ஜன.16) காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 69.03அடியாகவும், நீர் இருப்பு 5679மி.கன அடியாகவும் அதிகரித்தது. நீர்வரத்து வினாடிக்கு 3961 கன அடியாக உள்ள நிலையில் அணையிலிருந்து 319 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தாண்டின் தொடக்கத்திலேயே வைகை அணை அதன் முழு கொள்ளளவை எட்டி விட்டதால் ஐந்து மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: வேகமாக நிரம்பும் திருமூர்த்தி அணை... 23 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ள அபாய எச்சரிக்கை!