தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள குள்ளப்பகவுன்டன்பட்டியைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார்(42). உத்தமபாளையத்திலுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்த இவர், கடந்த 6ஆம் தேதி நீதிமன்ற பணிகளை முடித்துக் கொண்டு தனது இரு சக்கர வாகனத்தில் கம்பம் திரும்பிக் கொண்டிருந்தார்.
கோவிந்தன்பட்டி பகுதியருகே சென்று கொண்டிருக்கையில், அவரை பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று அவர் மீது காரை மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ரஞ்சித்குமாரை, அந்த கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது.
நிலப்பிரச்சினையில் அவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டு வந்த நிலையில், இது தொடர்பாக 3 வழக்கறிஞர்கள் உள்பட 10 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களைத் தேடி வந்தனர். இந்நிலையில், கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் கொடைக்கானலில் பதுங்கியிருப்பதாக தகவலறிந்து, குற்றவாளிகளான கார் ஓட்டுனர் செல்வம் என்ற சூப்செல்வம், ஆனந்தன் மற்றும் வழக்கறிஞர்கள் ஜெயபிரபு, மதன் இவர்களுடன் கூலிப்படையைச் சேர்ந்த ராஜேஸ், சஞ்சய், ராஜா, வேல்முருகன் உள்பட 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 8 பேரும் உத்தமபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மேலும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மதுரவாயலில் தலையில் கல்லைப் போட்டு இளைஞர் கொலை!