தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது சுருளி அருவி. இந்த அருவியானது தேனி மாவட்டத்தின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்நிலையில், கடந்த சில நாள்களாக அருவியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் போதியமழை இல்லாத காரணத்தால் சுருளி அருவியில் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.
இந்நிலையில், தென்மேற்குப் பருவமழையின் காரணமாக மேகமலை, இரவங்கலாறு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவந்தது. இதனால் அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வனத் துறையினரால் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது மழையளவு குறைந்து நீர்வரத்து சீரானதால் அருவியில் குளிப்பதற்கு வனத் துறையினர் அனுமதி அளித்துள்ளனர். மேலும் தொடர்ந்து ஐந்து நாள்களாக நிலவிவந்த தடை இன்று முதல் விலக்கப்பட்டதால் காலையிலிருந்தே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மிகவும் உற்சாகத்தோடு அருவியில் குளித்துவருகின்றனர்.