தேனி: ரயில்வே பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கி இருந்த விழுந்து இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மீட்கப்பட்ட மாணவர்களின் உடலைப் பார்த்து அவர்களது பெற்றோர்கள் கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி சிவராம் நகர் பகுதியில் வசிக்கும் சிவராஜன் என்பவரின் மகன் சிவசாந்தன் (12), அதே பகுதியில் கண்ணாத்தாள் கோயில் தெருவில் வசிக்கும் ரமேஷ் என்பவரின் மகன் வீரராகவன் (12), இருவரும் தேனியில் உள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தனர். இவர்கள் இருவரும் மே 18 ஆம் தேதி வெளியில் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சைக்கிளில், தேனி ரயில்வே நிலைய பகுதிக்குச் சென்றுள்ளனர்.
தேனி ரயில் நிலைய வளாகத்தில் சரக்குகளை ஏற்றி, இறங்கிச் செல்ல வசதியாக குடோன் ஒன்று அமைப்பதற்காகப் பிரம்மாண்ட பள்ளம் தோண்டப்பட்டு இருந்துள்ளது. அந்த பள்ளத்தில் மழை நீர் தேங்கி குலம் போல் காட்சி அளித்துள்ளது. தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கி கிடந்த நீரில் சிவசாந்தன், வீர ராகவன் இருவரும் குளிக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் வெளியில் சென்ற சிறுவர்கள் இரவு ஆகியும் வீடு திருப்பாததால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சிறுவர்கள் வழக்கமாகச் செல்லும் இடங்களில் தேடத் துவங்கியுள்ளனர். தேனி ரயில் நிலைய வளாகத்தில் தண்ணீர் தேங்கி இருந்த பள்ளத்தின் அருகில் சிறுவர்கள் ஓட்டி வந்த சைக்கிள் இருந்துள்ளது.
அதனால் சிறுவர்கள் குளத்தில் விழுந்து இருக்கலாம் என சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மே 18 ஆம் தேதி இரவு முதல் மறுநாள் அதிகாலை மூன்று மணி வரை தீவிரமாகத் தேடியுள்ளனர். இருப்பினும் சிறுவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
பின்னர் நேற்று முன்தினம் (மே 19) காலையில் மீண்டும் தேடுதல் வேட்டையைத் துவங்கினர். அப்போது பள்ளத்தில் தேங்கிக் கிடந்த தண்ணீரில் மூழ்கி இருந்த இரண்டு சிறுவர்களின் உடல்களும் மீட்கப்பட்டது. இதனைக் கண்டு சிறுவர்களின் பெற்றோர் கதறி அழுதனர். வீட்டில் இருந்து வெளியில் செல்வதாகக் கூறி விட்டுச் சென்ற சிறுவர்கள் பள்ளத்தில் தேங்கிக் கிடந்த தண்ணீரில் சடலமாக மீட்கப்பட்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
மீட்கப்பட்ட மாணவர்களின் உடல்களைத் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்காக தேனி போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இந்த ரயில் நிலைய வளாக பள்ளத்தில் தேங்கிக் கிடந்த தண்ணீரில் ஒரு முதியவரும், பல கால்நடைகளும் விழுந்து உயிரிழந்துள்ளன. இருப்பினும் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்காத காரணத்தால் இரண்டு சிறுவர்களின் மரணம் ஏற்பட்டிருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மாட்டு வண்டி மீது கார் மோதும் பதற வைக்கும் காட்சிகள்; தென்காசியில் நிகழ்ந்த சோகம்