தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. கரோனா நோய் பரவல் காரணமாக சுற்றுலாத் தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிப்பதால் ஆள் நடமாட்டமின்றி வைகை அணை வெறிச்சோடி காணப்படுகிறது.
இந்நிலையில் அணைப்பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் ஆண்டிபட்டி - சேடபட்டி கூட்டுக் குடிநீர் திட்டம் அருகே சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த இருவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் தேனி மாவட்டம் டி.பொம்மிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த மாரிமுத்து(45), மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள வி.பெருமாள்பட்டியைச் சேர்ந்த சதீஷ்குமார்(36) எனத் தெரியவந்தது. மேலும், இருவரையும் பரிசோதனை செய்ததில், அவர்களிடமிருந்து 20 வெடிமருந்துகள், 20 எலக்ட்ரிக்கல் டெட்டனேட்டர்கள் (தாயத்துகள்) பொருள்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அதனை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், விளைநிலங்களில் கிணறு வெட்டுவதற்காக சட்டவிரோதமாக வெடி மருந்துகள் வாங்கியதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த வைகை அணை காவல் துறையினர் இருவரையும் கைது செய்து ஆண்டிபட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.