தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் 31ஆம் தேதி கம்பம், சின்னமனூர், போடி, உத்தமபாளையம், தேனி, பெரியகுளம் ஆகியப் பகுதிகளைச் சேர்ந்த 20 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
உரிய சிகிச்சைக்குப் பின்னர் 20 பேருக்கும் இரண்டு முறை கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில் முதற்கட்டமாக 18 பேருக்கு கரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. இதனையடுத்து அவர்கள் கடந்த 3 நாட்களுக்கு முன்பு, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து வீடுகளுக்கு கார் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
தொடர்ந்து 31ஆம் தேதி அனுமதிக்கப்பட்டவர்களில் மீதமிருந்த இரண்டு நபர்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர்களுக்கும் கரோனா வைரஸ் தொற்று இல்லை என்று உறுதியானது. இதைத்தொடர்ந்து அந்த இரண்டு பேரும் கார் மூலம் அவர்களின் வீடுகளுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டனர்.
கரோனா வார்டில் வாயில் பகுதிக்கு வெளியே வந்த அவர்களை கை தட்டி வரவேற்ற மருத்துவக் குழுவினர் பூ, பிஸ்கட், பழங்கள் மற்றும் தொடர் மருந்துகள் கொடுத்து வழியனுப்பி வைத்தனர். கடந்த மூன்று நாட்களில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 20 கொரோனா நோயாளிகள் முழுமையாக குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கேள்விலாம் கேக்காத நா பதில் சொல்லுவேன்' - காவலர்களுடன் அதிமுக பிரமுகர் ரகளை