தேனி மாவட்டம் போடி அருகே உள்ள டொம்புச்சேரி பகுதியைச் சேர்ந்தவர்கள் மாரிமுத்து (35), காளியப்பன் (55), பழனிச்சாமி (60). ஏலத்தோட்ட கூலித் தொழிலாளிகளான இவர்கள், கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தனியார் தோட்டத்தின் வேலைக்காக இன்று (பிப். 9) சென்றுள்ளனர். வழக்கம்போல பணி முடிந்து ஒரே இருசக்கர வாகனத்தில் மூவரும் பயணம்செய்துள்ளனர்.
போடிமெட்டு மலைச் சாலையில் முந்தலுக்கு மேல் உள்ள முதலாவது கொண்டை ஊசி வளைவில் வந்துகொண்டிருந்தபோது, அவர்கள் வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காளியப்பன், பழனிச்சாமி ஆகிய இரு முதியவர்களும் படுகாயம் அடைந்தனர். மாரிமுத்துவிற்கு லேசான காயமும் ஏற்பட்டது.
இதையடுத்து பலத்த காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். இதில் முதலுதவி செய்யும்போது பழனிச்சாமி உயிரிழந்தார். இதையடுத்து மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட காளிமுத்துவும் வழியிலேயே உயிரிழந்தார்.
இது குறித்து குரங்கணி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். சாலை விபத்தில் இரு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சரக்கு விமானத்தில் கடத்த முயன்ற உயர் ரக கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்