வங்கக் கடலோரம் மையம் கொண்டுள்ள புரெவி புயல் இன்று (டிச. 04) கரையைக் கடக்க உள்ளதால் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்தப் புயலால் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொடைக்கானல் மலைப்பகுதியில் பயணம்செய்வதற்கு சார் ஆட்சியர் சிவகுருபிரபாகரன் தடைவிதித்துள்ளார்.
காட்ரோடு, பழனி, அடுக்கம் உள்ளிட்ட மலைச்சாலை வழியாக கொடைக்கானலுக்கு பயணிப்பதற்கு நேற்று (டிச. 03) இரவு 7 மணிமுதல் மறு உத்தரவு வரும்வரையில் இந்தத் தடை உத்தரவு நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொடைக்கானலுக்குச் செல்லும் முக்கிய வழித்தடமான தேனி – திண்டுக்கல் மாவட்ட எல்லையில் உள்ள காமக்காபட்டி சோதனைச்சாவடியில் பணியில் இருக்கும் காவல் துறையினர் இரவு 7 மணிக்கு மேல் வரும் வாகனங்களைத் திருப்பிவிடும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
அத்தியாவசிய பொருள்களைத் தவிர்த்து மற்ற உள்ளுர், வெளியூர் வாகனங்களை மலைச்சாலையில் பயணிப்பதற்கு காவல் துறையினர் அனுமதி மறுத்துவருகின்றனர்.
இதேபோல் பெரியகுளம் அருகே கும்பக்கரை – அடுக்கம் சாலையிலும் போக்குவரத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் அவ்வழியாக வருகின்ற வாகனங்களையும் காவல் துறையினர் திருப்பிவிடுகின்றனர்.
இதையும் படிங்க: ரஜினியின் முடிவை வரவேற்ற ஆந்திர முன்னாள் முதலமைச்சர்!