கரோனா நோய்ப் பரவலால் நாடு முழுவதும் சுற்றுலாத் தலங்கள், வழிபாட்டுத் தலங்கள், பள்ளிக் கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் கடந்த மார்ச் மாதம் முதல் காலவரையின்றி மூடப்பட்டது. நோய்த்தொற்று படிப்படியாக குறைந்ததை அடுத்து, தடைகளும் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டுவந்தன.
ஆனால், தேனி மாவட்டத்தில் மட்டும் சுற்றுலாத் தலங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீடித்துவந்தது. இதனால், வைகை அணை, சுருளி, கும்பக்கரை அருவி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல முடியாமல் மக்கள் ஏமாற்றத்துடனே காணப்பட்டனர்.
இந்நிலையில் இன்று, கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த வைகை அணைப் பூங்கா, மக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது. ஆனால், முன்னறிவிப்பின்றி மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியதால், குறைந்த அளவிலான சுற்றுலாப் பயணிகளே வருகைபுரிந்தனர்.
அணையின் இடது, வலது கரைகளில் உள்ள சிறுவர் பூங்கா, ஊஞ்சல்கள், யானை சறுக்கல்கள், மினி ரயில் வண்டி உள்ளிட்ட இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் வைகை அணை பூங்கா திறக்கப்பட்டுள்ளதால், வரும் நாள்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.