தேனி மாவட்டம், குச்சனூர் கிராமத்தில் உள்ள காசி ஸ்ரீஅன்னபூரணி கோயில் கல்வெட்டில் துணைமுதலமைச்சர் மகனும், அதிமுக வேட்பாளருமான ரவீந்தரநாத்குமார் பெயரை நாடாளுமன்ற உறுப்பினர் எனப் பொறிக்கப்பட்டிருந்தது. இது மாநிலம் முழுவதும் பெரும் சர்சையை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடப்பத்ற்கு முன்பே தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்தரநாத் குமார் என்று கல்வெட்டில் பொறிக்கப்பட்டது சட்டப்படி குற்றம் என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின.
இந்நிலையில் தேர்தல் முகவரான சந்திரசேகர், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட காவல்கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கல்வெட்டு வைத்த கோயில் நிர்வாகியும், முன்னாள் தலைமை காவலருமான வேல்முருகன் என்பவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட கோவில் நிர்வாகியான வேல்முருகன் அதிமுகவின் தீவிர விசுவாசி ஆவார். தலைமைக் காவலராக பணிபுரிந்த காலத்தில் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனை கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காவலர் சீருடையில் போராட்டம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.