தேனி மாவட்டம், வருஷநாடு அருகே சிங்கராஜபுரத்தைச் சேர்ந்தவர் பாண்டீஸ்வரன்(26). ராணுவ வீரரான இவர் மகராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள ராணுவ மருத்துமவமனையில் பணியாற்றி வருகிறார். தற்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த பாண்டீஸ்வரன், அதேபகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியுள்ளார். இதுகுறித்து மாணவியின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதன்பேரில், பாண்டீஸ்வரனிடம் விசாரணை மேற்கொண்டு, அவரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர். முன்னதாக தேனி மாவட்ட காவல் துறையினர் மூலம் மகராஷ்டிராவில் உள்ள ராணுவ உயரதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சிங்கராஜபுரத்தைச் சேர்ந்த மற்றொரு மாணவியின் தந்தையும், ராணுவ வீரர் மீது புகார் அளித்துள்ளார். அதில், 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் விடுமுறைக்கு வந்த பாண்டீஸ்வரன், 11ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த தனது மகளை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றினார். இருதரப்பு பெற்றோரும் கலந்து பேசி 2017, ஜூன் 13ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் செய்தோம். சிறுமிக்கு 18வயது பூர்த்தி அடைந்தவுடன் திருமணம் செய்து கொள்வதாக பாண்டீஸ்வரன் சம்மத பத்திரமும் எழுதிக் கொடுத்தார். தற்போது திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறுகிறார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கின் கீழும் பாண்டீஸ்வரன் கைது செய்யப்பட்டுள்ளார்.