தேனி மாவட்டத்தில் அமமுக வேட்பாளர்களை ஆதரித்து அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று பங்களாமேடு பகுதியில் தேர்தல் பரப்புரை செய்தார். டிடிவி தினகரனின் வருகையால், தேனி பங்களாமேடு பகுதியில் மாலை ஐந்து அளவில் இருந்தே அமமுக தொண்டர்கள் குவியத்தொடங்கினர். நேரம் செல்ல செல்ல தேனி நேரு சிலையில் இருந்து பரப்புரை மேற்கொள்ளவிருந்த இடமான பங்களாமேடு வரை தொண்டர்கள் குவிந்தனர். இதனையடுத்து தேனி−மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.
போக்குவரத்து நெரிசலை சரி செய்ய காவல்துறையினர் அமமுக தொண்டர்களை விலக்கினர். இதனால், ஆத்திரமடைந்த அமமுகவினர் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மதுரை - தேனி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் சாலை ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை நடுரோட்டில் இழுத்துப்போட்டு போக்குவரத்திற்கு இடையூறு செய்தனர். இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் , பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினர். இச்சம்பவத்தை அடுத்து காவல்துறையினர், வாகனங்களை மாற்றுப் பாதையில் திருப்பிவிட்டனர்.
இதனையடுத்து டிடிவி தினகரன் இரவு 9.45 மணி அளவில் தேனி பங்களாமேடு பகுதியில் பரப்புரை மேற்கொள்ள வந்தார். அப்போது பரப்புரை செய்வதற்கு நேரம் இல்லாததால் பிரச்சார வாகனத்தில் இருந்தவாறு பரிசுப்பெட்டகம் சின்னத்தை காண்பித்துவாறு சென்றுவிட்டார். இதனால் தேனி-ஆண்டிபட்டி பகுதிகளில் அவரது பரப்புரையை காணவிருந்த அமமுகவினர் ஏமாற்றமடைந்து திரும்பிச் சென்றனர்.