தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரையை அனைத்துக் கட்சியினரும் தொடங்கியுள்ளனர். இதனால் தற்போது அரசியல் களம் சூடுபிடித்துவருகிறது.
இதனையடுத்து ரஜினி, கமலை அடிக்கின்ற அடியில் நடிகர் விஜய் உள்பட எந்த நடிகரும் இனி அரசியலுக்கு வரக்கூடாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று (டிச. 23) செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில் தெரிவித்திருந்தார்.
சீமானின் இந்தப் பேச்சுக்கு சமூக வலைதளத்தில் நடிகர்கள் ரஜினி, கமல், விஜய் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் தேனி மாவட்ட விஜய் ரசிகர்கள் சீமானைக் கண்டித்து நடிகர் வடிவேலுவின் நகைச்சுவையை மேற்கோள்காட்டி போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
அதில், “என் தம்பி விஜய் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்போம் - சீமான் (அது வேற வாய்); நடிகர்கள் அரசியலுக்கு வர எண்ணவே கூடாது - சீமான் (இது நாற வாய்)” என வடிவேலு படத்தின் காமெடி வசனங்கள் இடம் பெற்றிருந்தது. மேலும், அரசியலின் நடிகன் சீமானே எங்கள் தளபதி பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது என்ற வசனங்களும் அதில் அச்சிடப்பட்டுள்ளன.
தேனி மாவட்ட இளைஞரணித் தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஒட்டப்பட்ட இந்த மெகா சைஸ் போஸ்டர்கள் தேனி என்.ஆர்.டி. நகர், பாரஸ்ட் ரோடு, புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க...பேரன் பேத்தியோடு விளையாடுங்கள் - ரஜினிக்கு சீமான் அட்வைஸ்!