தேனி: போடிநாயக்கனூரில், உரியப் பராமரிப்பு இல்லாமலும், வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் வருகை இல்லாமலும், உழவர் சந்தையானது வெறும் பெயரளவிற்கு இயங்கி வருகிறது. ஆட்கள் வராத சந்தையில் காய்ந்துபோன காய்கறிகளுடன் உள்ள ஒரு கடைக்கு, தினமும் விலை பட்டியலிட்டு அரசு அதிகாரிகள் ஏமாற்றுவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் ரயில்வே நிலையம் செல்லும் சாலையில், டிவிகேகே நகர் 100 அடி சாலையில் உழவர் சந்தை அமைந்துள்ளது. சந்தை தொடங்கப்பட்டபோது அனைத்து கடைகளும் இயங்கிவந்த நிலையில், பின்னர் படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. நகர்ப் பகுதியிலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த உழவர் சந்தை, கடந்த சில வருடங்களாகச் செயல்படாமல் இருந்து வருகிறது.
இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்ததும், மீண்டும் உழவர் சந்தையைச் செயல்படுத்த வேண்டும் என்ற அரசு உத்தரவைத் தொடர்ந்து, கடந்த ஒன்றரை ஆண்டிற்கு முன்பு உழவர் சந்தை மீண்டும் திறக்கப்பட்டது. சுமார் 21 கடைகள் இருந்த உழவர் சந்தையானது உரியப் பராமரிப்பு, அடிப்படை வசதிகள், போக்கு வரத்து வசதிகள் இல்லாமல், தற்போது ஒரே ஒரு காய்கறி கடை மட்டும் செயல்பட்டு வருகிறது.
மேலும், விவசாயத் துறை சார்ந்த அரசு அதிகாரி ஒருவர், உழவர் சந்தைக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு, அவருக்கு உதவியாளர் ஒருவரும் இங்கு பணியாற்றி வருகின்றனர். காய்கறி வாங்க ஆட்கள் வராத உழவர் சந்தையில், தினமும் அலுவலகம் திறக்கப்பட்டு, காய்கறிகள் விலைப்பட்டியல் இடப்பட்டு பெயரளவிற்கு ஒரே ஒரு கடை மட்டும் செயல்பட்டு வருகிறது.
உழவர் சந்தையில் கடை வைத்திருக்கும் நபர், வாகனங்களில் தெருத்தெருவாக சென்று காய்கறி விற்பனை செய்து வருவதாகவும், தனது வாகனத்தை நிறுத்தும் இடமாகவும், காய்கறி வைப்பு அறையாகவும் உழவர் சந்தையைப் பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.மேலும் இங்குள்ள காய்கறிகள் மிகவும் பழமையானதாகவும், காய்ந்து அழுகிய நிலையில் உள்ளதாலும் காய்கறி வாங்க யாரும் வருவதில்லை என்று கூறுகின்றனர்.
இந்நிலையில், உழவர் சந்தையிலுள்ள மோட்டார் அறை பழுதடைந்தும், கழிப்பறை மிகவும் சேதம் அடைந்து பயனற்று புதர் மண்டிய நிலையில் காணப்படுகிறது. மேலும், ஒரு கடை தவிர மீதி உள்ள 20 கடைகளில், இப்பகுதியில் வசிக்கும் நபர்கள், தேங்காய் உரித்து விட்டு தேங்காய் மட்டைகள் காயப்போடும் இடமாக பயன்படுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், உழவர் சந்தையை மேம்படுத்துவதற்கு, அரசு பணியாளர்கள் ஆர்வமின்றி செயல்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். செயலின்றி இருக்கும் உழவர் சந்தையை, அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து, விவசாயிகள் மற்றும் மக்கள் பயன்பாடு அடையும் வகையில் வேறு இடத்திற்கு மாற்ற மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடி மாநகராட்சியின் கல்விச் சேவைக்கு தேசிய அளவில் 3வது பரிசு.. மாநகராட்சி மேயர் தகவல்!