தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் உத்தமபாளையம் குடிமைப்பொருள் மற்றும் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் உதயசந்திரன் தலைமையிலான காவல்துறையினர், கம்பம் மெட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கம்பத்தில் இருந்து கேரளாவை நோக்கி வந்த பிக்அப் வாகனத்தை வழிமறித்து சோதனை செய்ததில், சட்டவிரோதமாக ரேஷன் அரசி கடத்திச் சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக கம்பத்தை சேர்ந்த ஜெயச்சந்திரன் (32), நஜிமா (42) ஆகிய இருவரையும் கைது செய்து 900 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து, உத்தமபாளையம் உணவுப் பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.