கரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகளவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தக் கரோனா வைரஸ் தொற்று காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்திவருவது மட்டுமல்லாமல் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு (மார்ச் 25ஆம் தேதி) நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வராததால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது. தடையை மீறி வெளியே வருபவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவும் செய்துவருகின்றனர்.
இந்நிலையில் கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தேனி காவல் துறை சார்பாக விழிப்புணர்வு வாகன பேரணி நடைபெற்றது.
தேனி பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள நேரு சிலை சந்திப்பில் தொடங்கிய இந்த வாகன பேரணியில் 60க்கும் மேற்பட்ட காவல் துறையினர் முகக்கவசம், கையில் பாதுகாப்பு உறை அணிந்துகொண்டு சாலை முழுவதும் சைரன் ஒலியை எழுப்பியவாறே சென்றனர்.
இந்த ஊர்வலமானது பெரியகுளம் சாலை வழியாக சென்று தேனி புறவழிச்சாலையை அடைந்தது. பின்னர் மதுரை சாலை வழியாக, புறப்பட்ட இடத்திற்கே வந்தடைந்தது.
மொத்தம் எட்டு கிலோமீட்டர் தூரம் பேரணி நடைபெற்றது. விழிப்புணர்வு பேரணியில் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு பிறப்பித்த ஊரடங்கு உத்தரவை பின்பற்றி பொதுமக்கள் வீட்டில் இருக்க வேண்டும், அத்தியாவசிய பொருட்கள் வாங்க, மருத்துவமனைக்கு செல்பவர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.
வெளியில் சென்று வீட்டிற்கு வந்ததும் கிருமி நாசினி கொண்டு கைகளை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பதிவுகளை ஒலிக்கச் செய்தவாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதையும் படிங்க: காவல் துறையினருக்கு குளுக்கோஸ் வழங்கிய 'மெட்ரோ' சிரிஷ்