தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள வருசநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் குபேந்திரன்(36). இவர் நாம் தமிழர் கட்சியின் கடமலை - மயிலை ஒன்றிய செயலாளராக இருந்தார். தற்போது நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேனி மாவட்ட 10ஆவது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு அக்கட்சி சார்பில் போட்டியிட்டுள்ளார்.
இவருடன் களத்தில் அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அமுமுக உள்ளிட்ட கட்சியினர் போட்டியிட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று மயிலாடும்பாறையிலிருந்து மஞ்சனூத்து நோக்கி இருசக்கர வாகனத்தில் முருகன் என்பவருடன் குபேந்திரன் சென்றுள்ளார். அப்போது, எதிர்திசையில் காய்கறி ஏற்றி வந்த சரக்கு லாரி மோதி, இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. இதில், சம்பவ இடத்திலேயே குபேந்திரன் உயிரிழந்தார். அவருடன் சென்ற முருகன் படுகாயமடைந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் முருகனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த மயிலாடும்பாறை காவல் துறையினர் லாரி ஓட்டுநர் தங்கவேல் என்பவரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். சாலை விபத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:
ஆட்டோ டிரைவரின் மகள் அசத்தல் சாதனை! 0.53 வினாடிகளில் தேசிய சாதனை முறியடிப்பு!