தேனி மாவட்டம் பெரியகுளம் நகரின் மையப்பகுதியில் என்றும் வற்றாத நதியாக வராக நதி ஓடிக்கொண்டிருந்தது. காசிக்கு அடுத்ததாக நதியின் இரு கரைகளிலும் ஆண், பெண் மருத மரங்கள் அமைந்திருப்பது தனிச்சிறப்பு.
இத்தகைய சிறப்பு வாய்ந்த வராக நதி காலப்போக்கில் குடியிருப்புகளின் கழிவுகள், குப்பைகள், இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வந்ததால் மாசடைந்து காணப்பட்டது.
இதனையடுத்து நதியை தூய்மைப்படுத்துவதற்காக பெரியகுளம் பகுதி தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர்களின் முயற்சியால் வராக நதியை காப்போம் என்ற குழு ஆரம்பிக்கப்பட்டது. பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் கரைப்பகுதியிலிருந்து நதியை சுத்தம் செய்யும் பணியை கடந்த செப்டம்பர் மாதம் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தொடங்கிவைத்தார்.
இந்நிலையில் 70 விழுக்காடு தூர்வாரும் பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று (அக்.3) தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் வராக நதியை பார்வையிட்டார். பெரியகுளம் மார்க்கெட் பகுதி, தண்டுப்பாளையம் ஆற்றுப் பாலம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வரும் பணிகளை அவர் பார்வையிட்டார்.
அப்போது ஆற்றின் நடுவே தூர்வாரும் பணிகளை மேற்கொண்டிருந்த ஹிட்டாச்சி வாகனத்தின் மீது அமர்ந்துவாறு தேனி எம்.பி. ரவீந்திரநாத் பார்வையிட்டார். இதில் நதியில் கழிவுநீர் கலக்காமல் இருப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளர், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதையும் படிங்க: தொண்டர்களை தரக்குறைவாக திட்டுவது திமுக கலாச்சாரம் - ராஜேந்திர பாலாஜி தாக்கு