தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மனோகரன் தனது 57 வயதில் (2017ஆம் ஆண்டு) ஒன்றாம் வகுப்பு படித்து வந்த 5 வயது சிறுமிக்கு மிட்டாய் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி தனது வீட்டில் வைத்து வலுக்கட்டாயமாக பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார்.
இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து மனோகரை கைது செய்த காவல்துறையினர், நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று (ஜன.27) தேனி மகிளா நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் மனோகரனுக்கு (தற்போதைய வயது 61) 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி வெங்கடேசன் தீர்ப்பளித்தார்.
மேலும், முதியவரால் பாதிப்புக்குள்ளான சிறுமியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அச்சிறுமியின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் உதவித்தொகையாக தமிழ்நாடு அரசு வழங்கவேண்டும் எனவும் தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டார். குற்றம்சாட்டப்பட்டவர் அபராதத்தைச் செலுத்தத் தவறினால் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் அவர் எச்சரித்தார். இதைத் தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டவரை சிறையில் அடைப்பதற்காக தகுந்த பாதுகாப்புடன் காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க:ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த இருவர் கைது!