தேனி: தமிழகத்தில் கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாகப் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்கக் கடத்த வாரம் முதல் குளிக்க வனத்துறையினர் தடை விதித்திருந்தனர்.
இந்நிலையில், மழை குறைந்ததால் அருவியில் பெருக்கெடுத்த வெள்ள நீரின் அளவு சற்று குறைந்து காணப்பட்டதால், 6 நாட்களுக்குப் பின் இன்று (டிச.24) முதல் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். இருப்பினும், மக்களின் பாதுகாப்பு கருதி மெயின் அருவிக்குச் சென்று குளிக்கத் தடை நீடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், குளிக்க வரும் சுற்றுலாப் பயணிகள் அருவியின் ஓரத்தில் செல்லும் ஓடைகளில் குளித்துச் செல்கின்றனர்.
இந்நிலையில், அருவியில் குளிக்க அனுமதிப்பது குறித்து வனத்துறையினர் முதல் நாளே அறிவிப்பு வெளியிடும் நிலையில், இன்று முன்னறிவிப்பு இன்றி காலையில் திறக்கப்பட்டதால் விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்தே காணப்படுகிறது.
கும்பக்கரையில் குளிக்க வந்த சுற்றுலாப் பயணி ஜெய்கணேஷ் கூறுகையில், “ஆண்டுதோறும் ஐயப்பன் கோயிலுக்குச் சென்று கும்பக்கரையில் வந்து தான் குளிப்போம். 6 நாட்களுக்குப் பின் இன்று தான் குளிக்க அனுமதி அளித்துள்ளனர்.
அருவியில் நீர்வரத்து சற்று அதிகரித்துக் காணப்படுவதால் பாதுகாப்பு சூழல் இல்லாத நிலையில் அருவியின் ஓரத்தில் ஓடும் நீர் நிலைகளில் குளித்துச் செல்கிறோம்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் 3500 வீடுகள், 175 சாலைகள் சேதம்; ஆய்வுக்கு பிறகு தலைமைச் செயலாளர் தகவல்!