தமிழ்நாட்டில் தஞ்சை, நாமக்கல், ஒரத்தநாடு, திருநெல்வேலி, சேலம் ஆகிய அரசு கால்நடை மருத்துவக்கல்லூரிகளைத் தொடர்ந்து, ஆறாவது கால்நடை மருத்துவக்கல்லூரி தேனியில் அமைய உள்ளது. இதற்கான அறிவிப்பு சட்டப்பேரவை விதி எண் 110இன் கீழ், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
தேனி மாவட்டம், வீரபாண்டி அருகே தப்புக்குண்டு கிராமத்தில் ரூ.265 கோடி மதிப்பில் 253.64 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி வாயிலாக நேற்று (டிச.10) அடிக்கல் நாட்டினார்.
இதைத் தொடர்ந்து, புதிய கட்டுமானத்திற்கான தொடக்க விழா இன்று(டிச.11) தப்புக்குண்டு கிராமத்தில் நடைபெற்றது. இவ்விழாவில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று கட்டுமானப் பணிகளுக்கான பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.
முன்னதாக வேத மந்திரங்கள் முழங்க பூஜை செய்யப்பட்டு, செங்கல் நடப்பட்டு புனித நீர் ஊற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், கால்நடை பல்கலைக்கழக துணை வேந்தர் பாலச்சந்திரன், ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி, மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், எம்.எல்.ஏ ஜக்கையன் உள்ளிட்டோர் புதிய கட்டடத்திற்கான கட்டுமானத்திற்கு செங்கல் நட்டு வைத்தனர்.
இந்த புதிய அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 4 வடிவமைக்கப்பட்ட நிர்வாக கட்டடம், நவீன வகுப்பறைகளுடன் கூடிய எட்டு கல்வித்தொகுதி கட்டடங்கள், மாணவ - மாணவியர்களுக்கான தனித்தனி விடுதிகள், உணவகம், கல்லூரி முதல்வர்களுக்கான குடியிருப்பு, விடுதி காப்பாளருக்கான குடியிருப்பு, விருந்தினர் இல்லம் ஆகிய வசதிகள் உருவாக்கப்பட உள்ளது.
மேலும் இக்கல்லூரியில் நவீன வசதிகளுடன் கூடிய பால், இறைச்சி பதப்படுத்தும் தொழில் நுட்ப நிலையங்கள் உட்பட 15 துறைகள், கால்நடை உற்பத்தி சார்ந்த தொழில் நுட்பங்களை வைப்பதற்கான கால்நடை பண்ணை வளாகம், கால்நடை சிகிச்சை சார்ந்த பயிற்சி அறை ஆகியவை நவீன வசதிகளுடன் ஏற்படுத்தப்பட உள்ளது.
இதையும் படிங்க: அதிமுகவின் 49ஆவது ஆண்டு தொடக்க விழா : கொடியேற்றிய ஓ.பி.எஸ்!