கரோனா நோய்த்தொற்று தேனி மாவட்டத்தில் வேகமாகப் பரவிவருகிறது. கடந்த மூன்று நாள்களில் மட்டும் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
மாவட்டத்தில் இதுவரை 284 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்களில் போடியைச் சேர்ந்த 53 வயது பெண், ஓடைப்பட்டியைச் சேர்ந்த 70 வயது முதியவர் என இருவர் உயிரிழந்தனர். 129 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 153 பேருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில், தேனி மாவட்டத்தில் கரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்து வணிகர்கள், விவசாயப் பிரதிநிதிகள், தனியார் மருத்துவமனை மருத்துவர்களுடனான கருத்துக் கேட்புக் கூட்டம் நேற்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து மாவட்டத்தில் நோய்த் தொற்று அதிகம் ஏற்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதித்து மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேனி மாவட்டத்தில் பெரியகுளம் நகராட்சி ஏற்கனவே முழுமையான கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று அதிகளவில் இருப்பதால் தொற்றுப் பரவலைக் குறைக்கும்பொருட்டு இதர நகராட்சிகளான போடிநாயக்கனூர், தேனி, சின்னமனூர், கம்பம், கூடலூர் நகராட்சிப் பகுதிகளில் கீழ்க்காணும் கட்டுப்பாடுகள் இன்று மாலை 6 மணிமுதல் மறு அறிவிப்பு வரும்வரையில் செயல்படுத்த உத்தரவிடப்படுகிறது.
நகராட்சிப் பகுதிகள்:
அனுமதிக்கப்பட்ட இடங்கள்
1.அத்தியாவசிய சேவைகள்
• காய்கறிகள்
• பழங்கள், பால், குடிநீர், சமையல் எரிவாயு
• மளிகைச் சாமான்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், நடமாடும் வாகனங்களில் காய்கறிகள், பழங்கள் விற்பனை (காலை 6 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை)
• மருத்துவமனைகள், மருந்துப் பொருள்கள், மருத்துவப் பரிசோதனை மையங்கள், அவசர ஊர்தி (ஆம்புலன்ஸ்)
2.கட்டுமான பொருள்கள் விற்பனை, கட்டுமான பணிகள்
3.தொழிற்சாலைகள்
4.வங்கிகள்
5.ஆட்டோ, டாக்ஸி, தனியார் வாகனங்கள் (மருத்துவ அவசர காரணங்களுக்கு மட்டும்) - கார் - 3 நபர்கள், ஆட்டோ - 2 நபர்கள், இருசக்கர வாகனம் - 1 நபர்
6.மத்திய-மாநில அரசு அலுவலகங்கள் இயங்க அனுமதி
7.பொது விநியோகக் கடைகள்
8.இறைச்சிக் கடைகள் (காலை 6 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை)
9.உணவகங்கள் காலை 7 மணிமுதல் 9 மணி வரையிலும் நண்பகல் 12 மணிமுதல் 2 மணி வரையிலும், இரவு 7 மணிமுதல் 9 மணி வரையிலும் பார்சல்கள், டோர் டெலிவரி மட்டும்
10.முதியோர் இல்லங்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர் இல்லங்கள்
11.அம்மா உணவகங்கள், சமுதாய சமையல் கூடங்கள்
12.அச்சகங்கள், ஊடகங்கள்
13.நீதிமன்றங்கள்
14.அனைத்துவிதமான சரக்கு வாகனங்கள்
15.வேளாண் இடுபொருள் விற்பனை நிலையங்கள்
16.பிறப்பு, இறப்பு, திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு இ-பாஸ் பெற்று வர வேண்டும்
•தேநீர் கடைகள்.
அனுமதிக்கப்படாத இடங்கள்
• பேக்கரிகள்
• நகைக் கடைகள்
• துணிக் கடைகள்
• பெட்டிக் கடைகள்
• பர்னிச்சர் கடைகள்
• வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள்
• தொலைக்காட்சி விற்பனை, பழுது நீக்கும் கடைகள்
• சாலையோரங்களில் உணவுப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள்
• எழுதுபொருள்கள் கடைகள்
• காலணிகள் விற்பனை செய்யும் கடைகள்
• ஃபேன்ஸி ஸ்டோர்ஸ்
• மொபைல் விற்பனை, பழுதுநீக்கும் கடைகள்.
கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள அனைத்துக் கட்டுப்பாடுகளும் எவ்வித தளர்வுமின்றி முழுமையாகத் தொடரும்.
பொது
1.இருசக்கர வாகனம், தனியார் வாகனங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அரசால் அனுமதிக்கப்பட்ட நபர்களுடன் பயணிக்க அனுமதி.
•கார் - 3 நபர்கள்
•ஆட்டோ- 2 நபர்கள்
•இரு சக்கர வாகனம் - 1 நபர்
மேற்படி அனுமதிக்கப்பட்ட நபர்களைவிட அதிகமாகப் பயணம் செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
2. அத்தியாவசிய பொருள்கள், மருத்துவப் பொருள்கள் வாங்க வரும் நபர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். முகக்கவசம் அணியாமல் வெளியே வரும் நபர்களுக்குப் பொது சுகாதார சட்டத்தின்படி ரூ.200 அபராதம் விதிக்கப்படும். தகுந்த இடைவெளியைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
பேருந்துகள் இயக்கம்
•தேனி மாவட்டத்தில் அரசு, சுகாதாரப் பணியாளர்கள் பணிக்கு வருவதற்கு உரிய பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
•தேனி மாவட்டத்திலிருந்து - மதுரை மாவட்டத்திற்குப் பேருந்துகள் இயக்கப்படாது.
•கம்பம்- பழனி, கம்பம் - திண்டுக்கல் வழித்தடத்தில் தற்போது இயங்கும் பேருந்துகளின் எண்ணிக்கையில் 50 விழுக்காடு மட்டும் பேருந்து இயக்கப்படும்.
வேளாண் பணிகள் சார்ந்த போக்குவரத்திற்கு எவ்வித தடையுமில்லை.
மேற்கண்ட தளர்வுகளும் கட்டுப்பாடுகளும் ஜூன் 24 அன்று மாலை 6 மணிமுதல் செயல்படுத்தப்பட வேண்டுமெனவும், இந்த ஊரடங்கு காலத்தில் அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி பொதுமக்கள், அலுவலர்கள், பணியாளர்கள், தொழிலாளர்கள் அனைவரும் முகக் கவசங்களை அணியவும், தகுந்த இடைவெளியினைப் பின்பற்றவும், சோப்பை உபயோகப்படுத்தி அடிக்கடி கைகளைக் கழுவவும் உள்ளிட்ட நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க : குற்றம் 03: உங்கள் அடையாளமும் திருடப்படலாம்!