தேனி: புரெவி புயலின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளரும், தேனி மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் உள்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதில் மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தடுப்பு பணிகள் ஆகியன குறித்து மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர், கோட்டாட்சியர்கள், நியமன அலுவலர்கள் மற்றும் நகராட்சி ஆணையாளர்கள், நகராட்சி சுகாதார அலுவலர்கள், பேரூராட்சி, ஊராட்சி உதவி இயக்குநர்கள் உட்பட பகுதி வாரியாக நியமிக்கப்பட்டுள்ள துறை சார்ந்த அலுவலர்களுடன், விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில் பேசிய அரசு முதன்மைச் செயலாளர் கார்த்திக், தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், ஆற்றங்கரை, நீர் நிலைகளின் அருகே வசிக்கின்ற பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தபடுத்தவும் அறிவுறுத்தினார்.
அவசர காலங்களில் மழை வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளாகும் மக்களை தங்கவைத்திட தேர்வு செய்யப்பட்டுள்ள 66 தங்கும் இடங்களை தயார் நிலையில் வைக்கவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பேரிடர் காலங்களில் பொது மக்களை மீட்க நியமிக்கப்பட்டுள்ள 195 நீச்சல் வீரர்களின் பட்டியல், அவர்களின் தொலைபேசி எண்கள், 2 நாரிழை படகுகள், 117 பரிசல்கள், மீட்கக் கூடிய உபகரணங்கள், பொது மக்களை மீட்க 71 மாநில பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற குழுவினர், கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படின் அதற்கு தேவையான மருந்து பொருட்கள் மற்றும் உணவுப்பொருள்கள், பொதுமக்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள், அத்தியாவசியப் பொருட்களான அரிசி, மண்ணெண்ணெய், காலி சாக்கு பைகள், சாலைகளில் விழும் மரங்கள் மற்றும் பாறைகளை அகற்றிட தேவையான இயந்திரங்கள், மின் கம்பங்கள் ஆகியன தயார் நிலையில் வைப்பது குறித்தும் எடுத்துரைத்தார்.
மேலும் பொது மக்கள் மழை, வெள்ளம், இயற்கை பேரிடர் தொடர்பான தங்களது புகார்களை 1077 என்ற கட்டணமில்லா தொலை பேசி எண்ணிலும், 04546-261093 என்ற எண்ணிலும் தெரிவிப்பதற்கு, பொது மக்களிடையே போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தினார்.