கரோனா பெருந்தொற்று வெளிநாடுகளிலிருந்து வரும் மக்களால் அதிகளவில் பரவி வருகிறது. இதனால், வெளிநாட்டிலிருந்து வரும் அனைவரும் கண்டிப்பாக 14 நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், அவர்களுக்கு இந்த தனிமை மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.
பலரும் இந்த மருத்துவக் கண்காணிப்பினால் அக்கம்பக்கத்தினர் தவறாக நினைத்துவிடுவார்களா என்ற அச்சத்தில் உள்ளனர். இத்தகைய தனிமையால் பாதித்த இளைஞர் ஒருவர், நிர்வாணமாக சாலையில் திரிந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சில நாள்களுக்கு முன்பு இலங்கையிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இவருக்கு கரோனா தொற்று இல்லாத போதிலும் அரசின் உத்தரவின்படி 14 நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான இளைஞர், திடீரென்று சாலையில் நிர்வாணமாக சுற்றியுள்ளார். அச்சமயத்தில், அந்த இளைஞரை நோக்கி எதிரே வந்த மூதாட்டியின் கழுத்தை கடித்துள்ளார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள், உடனடியாக இளைஞரை சுற்றி வளைத்து கை, கால்களை கயிற்றால் கட்டி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
மேலும், இதில் பலத்த காயமடைந்த மூதாட்டியை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: ஒற்றை இருமலால் காலியான சூப்பர் மார்கெட் - கரோனா பிராங்கால் ஏற்பட்ட விபரிதம்!