தேனி: தமிழக- கேரள எல்லைப் பகுதியான குமுளி, கம்பம்மெட்டு, அன்னையார்தொழு, கட்டப்பனை, சாந்தாம்பாறை ஆகிய இடுக்கி மாவட்ட பகுதிகளில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவிலான தோட்டங்களில் 75 சதவீதம், விவசாயிகள் வருடந்தோறும் ஏலக்காய் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இடுக்கி மாவட்டத்தில் காலம் தாழ்த்தி பெய்து வரும் மழையால் ஏலச்செடிகளில் ஏலக்காய்கள் நன்கு விளைந்து அறுவடை செய்யப்படும் தருணத்தில் வேர் அழுகல் மற்றும் தண்டு அழுகல் நோய் தாக்கம் அதிகரித்து வருகின்றது. மேலும், இடுக்கி மாவட்டத்தில் வீசிய சூறைக் காற்றினால் தட்டை ஒடிந்து, விளைந்த ஏலக்காய்களை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
தற்போது நடுத்தரமான ஏலக்காய் ரூபாய் 700 முதல் 800 வரை கொள்முதல் செய்ய வியாபாரிகள் முன் வந்தும் செடிகளில் ஏற்பட்ட நோய் தாக்குதலால் ஏலக்காய் விவசாயிகள் இந்த பருவத்தில் விளைந்த ஏலக்காய்களை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், பருவமழை அதிக அளவு பெய்யும் என்று எதிர்பார்ப்பில் மருந்து அடித்ததும் ஏலக்காய் நல்ல விளைச்சலை அடையாமல் போனதற்கு காரணமாக விவசாயிகள் கூறுகின்றனர் .
இதையும் படிங்க: "பயிர்களைக் காப்பாற்ற போர்க்கால நடவடிக்கை தேவை" - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்!
இது குறித்து ஏலக்காய் விவசாயி கூறுகையில், "ஏலக்காய் விவசாயத்தில் ஆண்டுக்கு 6 முறை வெள்ளாமை பெற முடியும். ஆனால் கடந்த மூன்று வருடங்களாகவே ஆண்டுக்கு 6 முறை விளைச்சல் எடுக்க கூடிய நிலைமாறி 4 முதல் 5 முறை மட்டுமே விளைச்சல் எடுக்க முடிகிறது. அதுவும் முழுமையான விளைச்சலைப் பெற முடியவில்லை.
விலை ஏறிய நேரத்திலும் ஏலக்காய் செடியில் தாக்கிய நோய் காரணமாக ஏலக்காய் மிகவும் வரத்து இல்லாமல் போனது. தற்போது ஏலக்காய் சந்தையில் 800 ரூபாய் முதல் விற்பனையாகி வருகிறது. நோய் தாக்குதல் காரணமாக ஏலக்காய் அழுகிப் போதிய விளைச்சலைப் பெற முடியவில்லை" என்றனர்
தமிழக- கேரள எல்லைப் பகுதியான இடுக்கி மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான தமிழகப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் ஏல விவசாயம் செய்து வரும் நிலையில் இந்த ஆண்டு போதிய அளவு விளைச்சல் கிடைக்கவில்லை என ஏலக்காய் விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: ரூ. 20க்கு விற்பனையாகும் ஒரு கிலோ தக்காளி - கடலூர் கடையில் அலைமோதிய கூட்டம்..