திண்டுக்கல்: இலங்கை இந்திய மீனவர்கள் விவகாரத்தில் இனிமேல் பேச்சுவார்த்தை இல்லை என இலங்கை அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
இந்தியா - இலங்கை எல்லை அருகே மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடலோர காவல் படையினர் கைது செய்வதும், அவர்களது படகு மற்றும் உடைமைகளை கைப்பற்றுவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. கடந்த டிசம்பர் 2 ஆம் தேதியன்றும், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த 18 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிரையில் அடைத்து விடுவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக மத்திய அமைச்சர் கீர்த்தி வர்தன், அண்மையில் நாடாளுமன்றத்தில் அளித்த தகவலின்படி, 45பேர் விசாரணைக் கைதிகளாகவும், 96 பேர் தண்டனை கைதிகளாக என மொத்தம் 141 மீனவர்கள் இலங்கை சிறைகளில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இலங்கை அமைச்சர் சந்திரசேகர் இலங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். அப்போது, இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க இந்தியாவுக்கு வந்த போது இலங்கை - இந்திய மீனவர்களிடையே ஒரு மனிதாபிமானமான தீர்மானம் எட்டப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. அந்த தீர்மானத்துக்கான கலந்துரையாடல் எப்போது எங்கிருந்து ஆரம்பிக்கப்படும்? என செய்தியாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு பதில் அளித்த அவர், “இந்திய மீனவர்கள் விவகாரத்தில் பேச்சுவார்த்தை எல்லாம் இனி கிடையாது. எல்லாம் முடிந்துவிட்டது. இனி இதுகுறித்து பேச்சுவார்த்தை இல்லை. இலங்கை அரசும், இந்திய அரசும் பேச்சுவார்த்தைகள் நடத்துகின்றன. அதில் தொழில்நுட்ப ரீதியான பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் பேசப்படுகின்றது.
இதையும் படிங்க: மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண்பதில் இந்தியா-இலங்கை நாடுகள் மனிதநேய அணுகுமுறையை மேற்கொள்வது ஏன்?
இனி மனிதாபிமான அடிப்படையிலான பேச்சுவார்த்தைக்கு நாங்கள் செல்ல போவதில்லை. இனி நடவடிக்கை தான். இழுவை படகுகளை பயன்படுத்தும் மீனவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும். முன்னதாக, மூன்று நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வந்த இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க, மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கும், அவர்களின் வாழ்வாதாரத்தை சீர்கொலைக்கும் காரணியாக உள்ள எல்லை மீறி மீன் பிடிப்புக்கான கைது பிரச்சனைகளுக்கு மனிதாபிமான முறையில் தீர்வு காண வேண்டியதன் அவசியம் குறித்து பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.கடந்த 10 ஆண்டுகளில் 150 கோடி மதிப்புள்ளான 558 தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை சொந்தமாகியுள்ளதாக தகவல்களும் வெளியாகி உள்ளது.