தமிழர்களின் வீர விளையாட்டாம் ஜல்லிக்கட்டு எனும் ஏறுதழுவுதல் விளையாட்டு பல்வேறு தடைகளுக்கு பின்னர் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் நிரந்தர சட்டம் இயற்றப்பட்டு நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் தேனி மாவட்டத்தின் புகழ்பெற்ற அய்யம்பட்டி ஜல்லிக்கட்டு இன்று நடைபெறுகிறது.
இப்போட்டியில் தேனி, மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுமார் 600 காளைகளும், 700 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். முன்னதாக கால்நடை மற்றும் பொது மருத்துவர்களால் மாடுகளும், வீரர்களும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தகுதியானவர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியை தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இதில், மாடு பிடி வீரர்கள் காளைகளை அடக்க முயன்றனர். ஆனாலும் மல்லுக்கட்டும் வீரர்களிடம் பிடிபடாமலும் போக்கு காட்டி சென்ற காளைகள் காண்பவர்கள் அனைவருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு வாகனம், தங்க காசுகள், கட்டில், பீரோ, அண்டா, பானை உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. மாடுகள் முட்டியதில் காவல் ஆய்வாளர் ஒருவர் உள்பட மாடுபிடி வீரர்கள் சுமார் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த போட்டிக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி தலைமையில் நான்கு துணை காவல் காண்காணிப்பாளர் உள்ளிட்ட 500க்கு மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: உங்களுக்காக உழைக்கக் கூடியவர்கள் யார்? - ஸ்டாலின்