தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தெப்பம்பட்டி பகுதியில் 2014ஆம் ஆண்டு பொங்கல் விழாவின்போது, எருதுவிடும் போட்டியில் நாகபிரபு என்ற இளைஞருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன், பாண்டி ஆகியோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவத்தால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கண்ணன், பாண்டி அவர்களது நண்பர்களான முருகன், பாலமுருகன், பிரேம்குமார் ஆகிய ஐந்து பேர்கள் சேர்ந்து நாகபிரபுவை கம்பி, கட்டையால் தாக்கியதால் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிந்து சம்பந்தப்பட்ட அந்த ஐந்து பேரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு காவல் துறையினர் உட்படுத்தினர். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தேனி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கபபட்டது.
குற்றவாளிகளான கண்ணன், பாண்டி, முருகன், பாலமுருகன், பிரேம்குமார் ஆகிய ஐந்து பேருக்கும் ஆறாயிரம் ரூபாய் அபராதத் தொகையுடன் கூடிய ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
மேலும் அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனையும் வழங்கப்படும் எனக் கூறி நீதிபதி அப்துல் காதர் தீர்ப்பு வழங்கினார். இதனைத் தொடர்ந்து குற்றாவாளிகள் ஐந்து பேரையும் காவல் துறையினர் மதுரை மத்திய சிறைக்கு பாதுகாப்புடன் கொண்டு சென்றனர்.
இதையும் படிங்க: குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்த கணவர் - உறவினர்கள் சாலை மறியல்