தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள நல்லமுடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரது மகன் தங்கவேல் (வயது 19). டிப்ளமோ பட்டதாரியான இவர் நேற்று முன்தினம் (அக்.20) வீரபாண்டியிலுள்ள முல்லைப்பெரியாற்றில் குளிக்கச் சென்றுள்ளார்.
அப்போது, எதிர்பாராத விதமாக அவர் ஆற்று நீரில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், இளைஞரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால், முல்லைப் பெரியாற்றிலிருந்து விநாடிக்கு 1,755 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், காணமால் போன இளைஞரை மீட்பதில் கடும் சிக்கல் ஏற்பட்டது. மேலும், இரவு நேரமாகியதால் மீட்புப் பணியும் கைவிடப்பட்டது.
இந்நிலையில் முல்லைப் பெரியாற்றில் காணாமல் போன இளைஞரின் உடல், ஆண்டிப்பட்டி அருகேவுள்ள குன்னூர் வைகை ஆற்றில் இன்று (அக்.22) காலை கண்டெடுக்கப்பட்டது. வைகை ஆற்றில் கரை ஒதுங்கிய தங்கவேலின் சடலத்தைக் கைப்பற்றிய காவல் துறையினர், அவரது உடலை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இது தொடர்பாக கானா விலக்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்ற விபத்துக்களைத் தவிர்ப்பதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில், பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.