தேனி உழவர் சந்தை அருகே உள்ளது மீறு சமுத்திரம் கண்மாய். மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் பனசலாற்றிலிருந்து வரும் தண்ணீர் மூலம் இக்கண்மாய் நிரப்பப்படுகிறது. இதன்மூலம் சுமார் நூற்றுக்கணக்கான ஏக்கர் பாசன வசதி அடைவதோடு மட்டுமல்லாது தேனி நகரின் நிலத்தடி நீர்மட்டத்தின் முக்கிய நீராதாரமாகத் திகழ்கிறது.
இந்நிலையில் தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் நேற்று (டிச. 15) அல்லிநகரம் மந்தையம்மன் கண்மாய், தேனி மீறு சமுத்திரம் கண்மாய் ஆகியவற்றை நேரில் சென்று ஆய்வுமேற்கொண்டார். இந்த ஆய்வில் கண்மாய் நீர்வழிப்பாதை, பாசன பரப்பளவு உள்ளிட்டவை குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஆர், “நாட்டில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் பாதுகாக்க வேண்டியது மத்திய நீர்நிலைக்குழு உறுப்பினரான எனது கடமையாகும். அந்த வகையில் சொந்த மாவட்டமான தேனியில் உள்ள இவ்விரு கண்மாய்களை ஆய்வுசெய்துள்ளேன்.
மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி தனது சொந்த நிதியிலிருந்தும் ஒதுக்கீடு செய்து இவ்விரு கண்மாய்களைப் புதுமைப்படுத்தும் பணி மேற்கொள்ள உள்ளேன். மேலும் தேனி மக்களின் நீண்ட நாள் கனவான மீறு சமுத்திரம் கண்மாயில் நடைபயிற்சித் தளம், படகு சவாரி இயக்கப்படுவது உறுதி” எனத் தெரிவித்தார்.
மேலும், கடந்த 10 ஆண்டுகளாக நிதிப் பற்றாக்குறையால் ஆமை வேகத்தில் நடைபெற்றுவந்த மதுரை - போடி அகல ரயில் பாதை பணி, தற்போது தனது முயற்சியால் தேவையான நிதி ஒதுக்கப்பட்டு ஆண்டிபட்டி வரை சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது என்றும், 2021 மார்ச் மாதம் மதுரை டூ போடி வரையில் ரயில் இயக்கப்படும் என்றும், திண்டுக்கல் - சபரிமலை ரயில் பாதை திட்டத்தையும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், இது தவிர தேனியில் கிடப்பில் உள்ள பழைய பள்ளிவாசல் வரையிலான திட்டச்சாலையை செயல்படுத்திட நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
இந்த ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ் உள்பட நகராட்சி, பொதுப்பணித் துறை அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: “நரிக்குறவர் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட காவலர் விடுவிக்கப்படுவதா?” - தீர்ப்பை மாற்றிய நீதிபதிகள்