தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள வருசநாட்டு மலைப்பகுதியில் அதிகளவில் மான்கள் வசித்துவருகின்றன. போதிய அளவில் மழை இல்லாததால், மலைப்பகுதியிலுள்ள நீருற்றுகள் வற்றிக் காணப்படுகிறது. இதனால், வனவிலங்குகள் தண்ணீர் தேடி மலையடிவார பகுதிகளிலுள்ள தோட்டப்பகுதிக்கு வர தொடங்கின.
வருசநாடு அருகே உள்ள கோவில்பாறை கிராமத்திற்குள் தண்ணீர் தேடி வந்த கடமான், பொதுமக்களைக் கண்டு மிரண்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, பொதுமக்களைக் கண்டவுடன் அங்கும் இங்குமாக ஓடியுள்ளது. தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த கண்டமனூர் வனத்துறையினர் கடமானை மீட்டு, அலுவலகத்திற்கு கொண்டுசென்றனர். இதனிடையே, செல்லும் வழியிலேயே கடமான் உயிரிழந்தது. பின்னர் கால்நடை மருத்துவர்கள் உயிரிழந்த கடமானின் உடலை உடற்கூறாய்வு செய்து, புதைத்தனர்.
இது குறித்து வனத்துறையினர், உயிரிழந்தது சுமார் 2 வயதுடைய ஆண் கடமான். ஊருக்குள் பொதுமக்களைக் கண்டதும், உயிர் பயத்தில் அங்கும் இங்குமாக ஓடிய அதிர்ச்சியில் இறந்திருக்கலாம், எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மயில், குரங்குகளுக்கு இரையாகும் பப்பாளிகள்... ஊரடங்கால் உருக்குலைந்த விவசாயிகள்!