தேனி: ஆண்டிப்பட்டி நகரின் மையப்பகுதியாக வைகை அணை சாலைப்பிரிவு உள்ளது. இங்குள்ள பிரதான கடைவீதியின் தபால் நிலையத் தெருவில் உள்ள பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஒரு கிணற்றில் கடந்த 3 நாட்களாக உள்ளே இருந்து பூனை ஒன்று கத்தும் சத்தம் கேட்டது.
இதையடுத்து அவ்வழியாக சென்றவர்கள் எட்டிப்பார்த்தபோது ஒரு கருப்பு நிற காட்டுப்பூனை தண்ணீரில் குப்பைகளுக்கு நடுவே தத்தளித்துக் கொண்டிருந்ததைக் கண்டு, அப்பகுதியினர் ஆண்டிபட்டி தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அங்கு விரைந்து வந்த 6 பேர் கொண்ட தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் ஒரு வாளியில் கயிறைக் கட்டி கிணற்றுக்குள் இறக்கி பூனையை மீட்க முயற்சித்தனர். ஆனால், சாவின் விளிம்பில் உயிர் பயத்தில் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த பூனை வாளிக்குள் வரவில்லை.
இதையடுத்து ஒரு தீயணைப்பு வீரர் கிணற்றில் இறங்கி பூனைக்கு அருகில் சென்று தான் வைத்திருந்த பிரத்யேக கருவியின் மூலம் பூனையை பிடித்து வாளிக்குள் போட்டார். இதையடுத்து உடனடியாக கிணற்றின் மேலே இருந்தவர்கள் வாளியை மேலே தூக்கி, பூனையை கிணற்றிற்கு வெளியே விட்டனர்.
கிணற்றை விட்டு வெளியே வந்ததும் வாளியிலிருந்து தாவிக் குதித்து அந்த 3 அடி நீள காட்டுப்பூனை மின்னல் வேகத்தில் அவ்விடத்தை விட்டு ஓடி மறைந்தது. மூன்று நாட்களாக கிணற்றில் விழுந்து சாவின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருந்த பூனையை ஒரு மணி நேரம் போராடி உயிருடன் மீட்ட ஆண்டிபட்டி தீயணைப்புத்துறையினருக்கு அவ்வழியாகச் சென்ற பொது மக்கள் கைகுலுக்கி தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தேனி அருகே கார் கவிழ்ந்து 8 பேர் உயிரிழப்பு - முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு