தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள அரப்படித்தேவன்பட்டியைச் சேர்ந்தவர் உமாபிரியா. இவரது கணவர் ரமேஷ்(35) கடந்த 2014ஆம் ஆண்டு தேனி – மதுரை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தார்.
இது தொடர்பாக உமா பிரியா கொடுத்த புகாரின் பேரில் கானா விலக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து பெரியகுளம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இதில் விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடாக அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 24 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என கடந்தாண்டு நீதிபதி உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து இழப்பீடு வழங்காததால் போக்குவரத்து கழகத்திற்கு மேலும் கால அவகாசம் அளித்து 25 லட்சத்து 59 ஆயிரத்து 618 ரூபாய் கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஓர் ஆண்டுக்கு மேலாகியும் அரசுப் போக்குவரத்துக் கழகம் இழப்பீட்டுத் தொகை வழங்காத நிலையில் இன்று 2 அரசுப் பேருந்துகளை ஜப்தி செய்து பெரியகுளம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி திலகம் உத்தரவிட்டார்.
இதையடுத்து மதுரை செல்வதற்காக பெரியகுளம் பேருந்து நிலையத்தில் தயாராக இருந்த 2 அரசுப் பேருந்துகளை ஜப்தி செய்வதற்கு இன்று நீதிமன்ற அமீனா ரமேஷ் தலைமையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது இறந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக பெரியகுளம் அரசுப் போக்குவரத்து கழக பணிமணை மேலாளர் உறுதியளித்ததையடுத்து ஒரு பேருந்தை மட்டும் அமீனா ஜப்தி செய்து நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றார்.
இதையும் படிங்க:சாலை மறியலில் ஈடுபட்ட ரேஷன் கடை பணியாளர்கள் கைது!