தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (36), இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தார். கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக தாய்நாட்டிற்காக பணியாற்றி வந்த இவர், தற்போது 'நாயக்' எனும் பதவி வகித்தார்.
எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட ஆறுமுகம்!
இவர் இந்தியா – பாகிஸ்தான் எல்லையான ஜம்மு - காஷ்மீர் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். இவர் தங்கியிருந்த முகாமில் 10 வீரர்கள் தங்கியிருந்தனர். இந்த முகாமில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த ஆறுமுகம் ஜம்முவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி, கடந்த 8ஆம் தேதி இரவு உயிரிழந்தார். நாட்டிற்காக வீரமரணம் அடைந்த ஆறுமுகத்தின் உடல் இன்று அவரது சொந்த ஊரான வடுகபட்டியில் ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
ராணுவ மரியாதையுடன் இறுதிசடங்கு
நள்ளிரவு வடுகபட்டிக்கு கொண்டு வரப்பட்ட ஆறுமுகத்தின் உடலுக்கு குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஊர்ப் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவரது உடல் மயானத்திற்கு ராணுவ வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி, ராணுவ உயர் அலுவலர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து ஆறுமுகத்தின் உடல் மீது போர்த்தப்பட்டிருந்த இந்திய தேசியக் கொடியை அவரது குடும்பத்தினரிடம் ராணுவ வீரர்கள் ஒப்படைத்தனர். பின்னர் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் ஆறுமுகத்தின் உடல் தகனம் செய்யப்பட்டது. இன்னும் 3 மாதங்களில் பணி ஓய்வு பெற உள்ள நிலையில் வீரமரணம் அடைந்த ஆறுமுகத்தின் இழப்பால், அவரது குடும்பத்தினர் மட்டுமல்லாது வடுகபட்டி ஊர்ப் பொதுமக்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
வீரமரணமடைந்த ராணுவ வீரர் ஆறுமுகத்திற்கு பாண்டீஸ்வரி (30) என்ற மனைவியும், ஜெயஸ்ரீ (13), சபரி (7) ஆகிய இருகுழந்தைகளும் உள்ளனர்.
இதையும் படிங்க:சிதிலமடைந்த வீட்டில் சிரமப்படும் தூய்மை பணியாளர்கள்: கண்டுகொள்ளாத அரசு?