இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”தேர்தல் முடிந்த பின்னும் அலுவலர்கள் ஆய்வு செய்வது அச்சமாக இருக்கிறது. மதுரையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் இடத்துக்கு வட்டாட்சியர் எதற்காகச் சென்றார் என்று மாவட்டத் தலைமைத் தேர்தல் அலுவலரோ, தேர்தல் ஆணையரோ தெரிவிக்காமலே அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.
எதுவுமே நடக்கவில்லை என்றால் ஏன் பணியிடை நீக்கம் செய்தனர். சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் ஏன் ஊடகத்துக்கு முன் பதிலளிக்கவில்லை.
அரசு நினைத்தால் அம்மிக்கல்லும் பறக்கும். தோற்று விடுவோமோ என்ற பயத்தில் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் நன்றாக உள்ளன. ஆனால் அதை நடைமுறைப்படுத்தும் வருவாய்த் துறை அலுவலர்கள் மாநில நிர்வாகத்தை சேர்ந்தவர்கள். அதனால் அவர்கள், வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமாருக்கு ஆதரவாக செயல்படுவார்கள்.
அனைத்து வேட்பாளர்களும் சொல்வதுபோல் தேனியில் பணமழைப் பொழிந்தது. ஒரு தொகுதிக்கு 500 கோடி ரூபாய் செலவு செய்தனர். தற்போது தேர்தல் முடிந்த பின்னர் ’நீ எனக்கு வாக்களிக்கவில்லை, அதனால் நான் கொடுத்த இரண்டாயிரம் ரூபாயை திருப்பிக் கொடு’ என மக்களிடம் மல்லுக்கு நிற்கின்றனர்.
71 விழுக்காடு மக்கள் வாக்குப்பதிவு செய்துள்ளது வரவேற்கத்தக்கது. ஆரோக்கியமான நிர்வாகம் அமைய வேண்டும் என்று மக்கள் தானாக வந்து வாக்களித்துள்ளனர்.
வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் வேட்பாளர்களின் முகவர்கள் இருப்பது வழக்கம். ஆனால் இவர்கள் இரவு பத்து மணிவரை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
இரவில்தான் அதிக பாதுகாப்புத் தேவை; பகலில் அல்ல. எனவே முகவர்கள் முழு நேரமும் வாக்குப்பதிவு வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் இருக்க அனுமதிக்க வேண்டும். இது தொடர்பாக நாளை தேர்தல் ஆணையரிடமும், மாவட்டத் தலைமைத் தேர்தல் அலுவலரிடமும் மனு அளிக்க உள்ளோம்” என்றார்.