நீலகிரி: ஊட்டியில் கடும் பனிப்பொழிவு காரணமாக அதிகாலையில் நேரங்களில் எங்கும் உறைப்பனி படர்ந்துள்ளது. இதனால், கடும் குளிர் காணப்பட்டுள்ளது. இந்நிலையில், குன்னூர், கோத்தகிரி போன்ற பகுதிகளில் வெப்பநிலை மைனஸ் 1 டிகிரி செல்சியஸ் உள்ளது. இந்த உறைப்பனியின் காரணமாக ஊட்டி தற்போது காஷ்மீர் போன்று காட்சியளிக்கிறது.
மார்கழி, தை மாதம் தொடங்கியுள்ள நிலையில் தற்போது பனிப்பொழிவு அதிகரித்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை உறை பனிப் பொழிவு காணப்படும். இதனால், நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கோத்தகிரி போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக உறை பனிப்பொழிவின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
மைனஸ் 1 டிகிரி வெப்பநிலை:
இந்த நிலையில் இன்று (ஜனவரி 7) செவ்வாய்க்கிழமை, உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மைனஸ் ஒன்று டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால், ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலையில் பனிமூட்டம் அதிகரித்து காணப்பட்டுள்ளது.
அப்பகுதியில் உள்ள புற்களில் இருந்த நீர் அனைத்தும் உறைந்து, புல்வெளிகளின் மீது வெள்ளைக் கம்பளம் போர்த்தியது போன்று பனி படர்ந்து ரம்மியமாக காணப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கு குட்டி காஷ்மீர் போன்று காட்சியளித்துள்ளது. இதனால், நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பனிப்பொழிவு உள்ள இடங்களுக்கு சென்று புகைப்படங்கள் எடுத்து மகிழ்கின்றனர்.
இதையும் படிங்க: கடும் பனிமூட்டம் காரணமாக விமான சேவை ரத்து!
விவசாயிகள் வேதனை:
உறைபனிப் பொழிவின் தாக்கம் குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் அதிகளவு இருப்பதால், தேயிலை பயிர் மற்றும் மலைத்தோட்ட காய்கறிகள் கருகி காய்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும், பனியின் தாக்கத்தால் பல ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள தேயிலைச் செடிகள் கருகிவரும் நிலையில், அரசு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு:
தொடர்ந்து, உறைபனிப் பொழிவால் உள்ளூர் வாசிகளின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. காலை நேரங்களில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீரர்கள் மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ள முடியாமல் சிரமம் அடைந்து வருவதாக உள்ளூர் வாசி சஞ்சய் சரவணன் தெரிவித்துள்ளார்.
அதேபோல், சாலை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது பனி படர்ந்து காணப்பட்டதால் வாகனங்களை இயக்க மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். வரும் நாட்களில் நகர்ப்புறங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை ஜீரோ டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ள நிலையில், உள்ளூர் வாசிகள் குளிர் ஆடைகளை அணிந்தவாறு செல்கின்றனர்.