தேனி மாவட்டத்தில் பெரியகுளம், தேனி, போடி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் ஆகிய ஆறு ஒன்றியங்களில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்நிலையில் மாவட்டத்தின் ஒருசில இடங்களில் வாக்குச்சாவடி மையங்களில் ஏற்பட்ட மின் தடையால் வாக்காளர்கள் வாக்களிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதில் உத்தமபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட நாராயணத்தேவன்பட்டி, பெரியகுளம் ஒன்றியத்திற்குட்பட்ட எண்டப்புளி ஆகிய கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் மின்தடை ஏற்பட்டு வாக்குசாவடி அறை இருள் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் வாக்களர்கள் சின்னங்களை தேர்வு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டதாக குற்றம்சாட்டினர்.
இங்கு வாக்களிக்க வந்த திமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன், வாக்குச்சாவடியில் மின்சாரம் இல்லாததால் டார்ச் லைட்டுடன் வந்து வாக்களித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், "வாக்குச்சாவடி மையங்களில் மின்சாரம், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தருவது அரசின் கடமையாகும். மின்சார வசதி இல்லாத இந்த வாக்குச்சாவடி அதிமுக அரசின் நிர்வாக சீர்கேட்டிற்கு உரிய சாட்சியாகும்'' என்றார்.
இதையும் படிங்க: 2ஆம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு!