தேனி மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் வார விழா மார்ச் 3ஆம் தேதி முதல் ஒரு வார காலமாக நடைபெற்றுவருகின்றது. அதன் தொடர்ச்சியாக நிறைவு நாளான இன்று பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், தேனி தமிழ்ச் சங்கத்தினர் பங்கேற்ற வழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தேனி மதுரை சாலையில் உள்ள ஆர்.சி. பள்ளியில் தொடங்கிய இந்தப் பேரணியை மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் கொடியசைத்து தொடங்கிவைத்தார். முன்னதாக தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் குறித்த உறுதிமொழியை பள்ளி மாணவ, மாணவிகள் எடுத்துக்கொண்டனர்.
இந்த ஊர்வலத்தில், அன்னைத் தமிழே ஆட்சி மொழி! சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்! வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் ஆட்சித்தமிழில் அமையட்டும்! என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, கோஷங்களை எழுப்பி மாணவ, மாணவிகள் சென்றனர். தேனி - மதுரை சாலை, பழைய பேருந்து நிலையம் வழியாக நேரு சிலை சந்திப்புப் பகுதியில் இப்பேரணி நிறைவடைந்தது.
இதையும் படிங்க: தலைமை செயலகத்தில் கொரோனா விழிப்புணர்வு