தேனி மாவட்டம், போடி அருகே உள்ளது ரங்கநாதபுரம். 'குட்டி திருப்பூர்' என அழைக்கப்படும் இக்கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் வீடுகளில் இருந்தே, குழந்தைகளுக்கான ஆடைகள், சுடிதார், சேலை, வேஷ்டி உள்ளிட்ட தையல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, பரவி வரும் கரோனா நோய்த் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அன்றாட உணவிற்கே வழியின்றி, தவித்து வரும் தையல் தொழிலாளர்கள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உதவிட வேண்டும் என்று கூறி, சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் ரங்கநாதபுரம் பகுதியில் உள்ள தெருவில் சமூக இடைவெளிவிட்டு நின்று தர்ணாவில் ஈடுபட்டனர்.
அப்போது, அரசு கொடுத்த ஆயிரம் ரூபாய் வாழ்வாதாரத்திற்குப் போதுமானதாக இல்லை என்றும், தங்களது குழந்தைகளைக் காப்பாற்றுவதற்கும், உணவு வழங்குவதற்கும் உரிய நடவடிக்கை எடுத்து நிதி உதவி அளித்திட வேண்டும் என்றும் தையல் பெண் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பெண்கள் திடீர் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:இலவச அரிசி - அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் திடீர் தர்ணா