தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜாராம் (75). அதேப் பகுதியில் உள்ள தனது மகன் ராஜேஷ் வீட்டில் வசித்துவந்துள்ளார். கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி உடல்நலம் சரியில்லாமல் ராஜாராம் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ராஜாராம் இறப்பதற்கு முன்பு செப்டம்பர் 5ஆம் தேதி அன்று இரவு பழனிசெட்டிபட்டி நெடுஞ்சாலையோரத்தில் உள்ள ஒரு பாத்திரக் கடை முன்பு தூங்கியிருக்கிறார். அங்கு வந்த ராஜேஷ் தந்தையைக் கொடூரமாகக் கம்பியால் தாக்கிய காட்சி அங்குள்ள பாத்திரக் கடை சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இதனைப் பார்த்த கடை உரிமையாளர் தீபக் அதிர்ச்சியடைந்து ராஜேஷ் தாக்கியதால் அவரது தந்தை சில நாட்களிலேயே உயிரிழந்ததாகக் கூறி முதலமைச்சரின் தனிப்பிரிவு, காவல் கண்காணிப்பாளர் என அனைத்து தரப்பிலும் புகார் அளித்துள்ளார்.
அதனடிப்படையில் நேற்று பழனிசெட்டிபட்டி காவல் துறையினர் மருத்துவக் குழுவுடன் ராஜாராம் உடல் புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி அவரது உடலை உடற்கூறாய்வு செய்தனர். இந்த உடற்கூறாய்வின் முடிவில் உண்மை வெளிவரும் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்க: