தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள கானா விலக்கில், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி திண்டுக்கல், விருதுநகர், அண்டை மாநிலமான கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் இருந்தும் நாள்தோறும் 500 முதல் 1000 பேர் உள், வெளிநோயாளிகளாகச் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
சட்ட வழக்குகளில் தொடப்புடைய சுமார் 50 முதல் 80 பேர் வரை சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இங்கு கடந்த 2008ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட புறக்காவல் நிலையம் சொந்தக் கட்டிடம் இல்லாமல் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள புறக்காவல் நிலையத்தின் புதிய கட்டடடத்தை தென்மண்டல காவல்துறை தலைவர் முருகன் இன்று(டிச.12) திறந்து வைத்தார்.
இந்தப் புறக்காவல் நிலையம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு பாலமாக செயல்பட்டு அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்து மருத்துவர்களை அணுகுவதற்கு ஏதுவாக செயல்படும். மதுரை, திண்டுக்கல் அரசு மருத்துவமனைகளை வான்தந்தி மூலம் எளிதில் தொடர்பு கொள்ள முடியும் என்பதால் பொதுமக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி முத்துச்சாமி, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி, தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் இளங்கோவன், காவல்துறை அலுவலர்கள், மருத்துவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: ஸ்ரீரங்கத்தில் புறக்காவல் நிலையம் திறப்பு!