தேனி: 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில், 38 இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியது. தேனி தொகுதியில் மட்டும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அப்போதைய அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோரை தோற்கடித்து, எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார். ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊர் என்பதால், தேனி தொகுதியில் பிற கட்சிகளை விட, அதிமுக சற்று வலுவாக உள்ளதாகவே பார்க்கப்படுகிறது.
ஈபிஎஸ்-க்கு எதிராக வியூகம்?: இதற்கிடையே, கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ள நிலையில், ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரனை தவிர்த்து, வேறு யார் வேண்டுமானாலும் கட்சியில் சேர்க்கப்படுவார்கள் என பழனிசாமி கூறியுள்ளார். இதனால் ஓபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகியோர் மூவரும் விரைவில் சந்தித்து, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அரசியல் வியூகம் வகுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே சசிகலா, டிடிவி தினகரனை அதிமுகவில் சேர்க்கலாம் என ஓ.பன்னீர்செல்வம் கூறிவந்தார். மூவரும் தனி அணியாகவோ அல்லது தனி கட்சியை தொடங்கினாலோ தென் மாவட்டங்களில் ஓரளவு மக்களின் ஆதரவை பெற முடியும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
டிடிவி தினகரன் சூசகம்: இந்நிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளையொட்டி, அமமுக சார்பில் தேனியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் உரையாற்றிய தினகரன், "1999ம் ஆண்டு இதே இடத்தில் என்னை தேனி மக்களவை தொகுதி வேட்பாளராக ஜெயலலிதா அறிமுகப்படுத்தினார்.தஞ்சாவூர் நான் பிறந்த மாவட்டம் என்றாலும், அரசியலில் என்னை ஜெயலலிதா அறிமுகப்படுத்தியது தேனியில் தான். அதிக வாக்கு வித்தியாசத்தில் பெரியகுளம் மக்கள் என்னை வெற்றி பெறச்செய்தார்கள். கட்சி நிர்வாகிகளிடம் தேனியில் வீடு பார்க்க சொல்லியிருக்கிறேன். 10 ஆண்டுகள் உங்களுடன் இருந்துள்ளேன்; மீண்டும் உங்களுடன் இருக்க வேண்டும் என்று சூசகமாக பேசுனார்.
சரியான நேரத்தில் தீர்ப்பு: ஆர்.கே.நகர் தேர்தலில் தொப்பி அணிந்து கொண்டு எனக்காக வாக்கு கேட்டார் எடப்பாடி பழனிசாமி. என் பெயரை கூட அவருக்கு ஒழுங்காக சொல்லத் தெரியாது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிரி திமுக கிடையாது. நானும், ஓ.பன்னீர்செல்வமும் மட்டும் தான். தற்போது வேண்டுமானால் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், சரியான நேரத்தில் மக்கள் தீர்ப்பளிப்பார்கள். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.
ஓபிஎஸ் கோபித்துக் கொண்டு போனதால், எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்கினோம். துரோகம் செய்தவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. "ஸ்டாலின் தான் வர்ராறு, விடியல் தரப்போறாரு" என்று சொன்னார். ஆனால் அவரது மகனுக்கும், மருமகனுக்கும் தான் விடியல் தந்து கொண்டுள்ளார்" என கூறினார்.
இதையும் படிங்க: பொதுக்குழு வழக்கு தீர்ப்பால் யாருக்கும் பின்னடைவு இல்லை: வி.கே.சசிகலா