தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அமைந்துள்ளது சோத்துப்பாறை அணை. 126.28 அடி நீர்த்தேக்க கொள்ளளவு கொண்ட இந்த அணையின் மூலம் பெரியகுளம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பழைய, புதிய ஆயக்கட்டு பகுதிகள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில் கடந்த அக்டோபர் மூன்றாம் தேதி அணையின் முழுக்கொள்ளவை எட்டி நீர் நிரம்பி வழிந்தது. இதனையடுத்து பாசன வசதிக்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடவேண்டும் என பெரியகுளம் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதன்படி, தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் இன்று சோத்துப்பாறை அணையில் இருந்து பெரியகுளம் பகுதி பாசன வசதிக்காக தண்ணீர் திறந்துவைத்தார். பெரியகுளம் பகுதி முதல்போக சாகுபடிக்காக இன்று முதல் 62 நாட்களுக்கு 30கன அடி வீதமும், அதனையடுத்த 31 நாட்களுக்கு 27கன அடி வீதமும், அதனையடுத்த 59நாட்களுக்கு 25கன அடி வீதமும், ஆக மொத்தம் 152 நாட்களுக்கு 360.46 கன அடி வீதம் தண்ணீர் இருப்பை பொறுத்து நீர் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பெரியகுளம் பகுதியில் உள்ள 2 ஆயிரத்து 865 ஏக்கர் பழைய, புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதிபெறும். தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பெரியகுளம் தாலுகாவிற்குட்பட்ட தென்கரை, லட்சுமிபுரம், தாமரைக்குளம் ஆகிய கிராமங்களுக்கு குடிநீர் தேவை பூர்த்தியாகும்.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் இருப்பு 100.44மி கன அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து 100 கன அடியாக உள்ளது. பாசனத்திற்காக திறக்கப்படும் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுப்பணித்துறை அலுவலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க:15 ஆண்டுகளாக நீரின்றி வறண்டு கிடக்கும் பஞ்சப்பட்டி ஏரி - நீர் கொண்டுவர விவசாயிகள் யோசனை!