தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா கடத்தப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், கம்பம் மணிக்கட்டி ஆலமரம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், சந்தேகத்திற்கிடமாக வந்த சரக்கு வாகனத்தை சோதனைச் செய்தனர்.
அதில், அவர்கள் மறைத்து வைத்திருந்த ஒன்பது மூட்டைகளிலிருந்து 180 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மூன்று பெண்கள் உள்பட ஐந்து பேரை கைதுசெய்தனர். மேலும் தப்பியோடிய நான்கு பேரை காவல் துறையினர் தேடிவருகின்றனர். இதையடுத்து, கம்பம் காவல் நிலையத்தில் வைத்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்த சுகப்பரியா (30), முத்துச்செல்வம் (28), சந்தோஷ் (27) சுவாதி (34), ஈஸ்வரி (45) எனத் தெரியவந்தது.
இவர்கள் ஆந்திர மாநிலத்திலிருந்து கஞ்சாவை வாங்கி வந்த நிலையில், 144 தடை உத்தரவால் கம்பம் மலை அடிவாரப் பகுதியில் பதுக்கிவைத்துள்ளனர். தற்போது ஊரடங்கில் தளர்வு ஏற்பட்டதையடுத்து, விற்பனைக்காக கடத்திச் சென்றதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக கம்பம் வடக்கு காவல் துறையினர் வழக்குப் பதிந்து அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். மேலும், தப்பியோடிய செல்லக்காளி, ஜெயக்குமார் உள்ளிட்ட நான்கு பேரை பிடிப்பதற்கு தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதுபோன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேனி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க:ஹைதராபாத்தில் 1500 கிலோ கஞ்சா பறிமுதல்