தேனி மாவட்டத்தில் உள்ள மனமகிழ் மன்றங்களில் அனுமதியின்றி சூதாட்டங்கள் நடைபெறுவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பழனிசெட்டிபட்டி காவல் நிலைய ஆய்வாளர் பாலகுரு தலைமையிலான காவல் துறையினர் பூதிப்புரம் சாலையில் உள்ள வைகை மனமகிழ் மன்றத்தில் சட்டவிரோதமாகச் சூதாடிக்கொண்டிருந்த கும்பலை சுற்றிவளைத்தனர்.
இதில் பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த முருகன், செல்வம், ஆண்டிபட்டி தாலுகா அம்மாபட்டியை சேர்ந்த அம்சு, தேனி பாரஸ்ட்ரோடு பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன், விஸ்வநாததாஸ் நகரைச் சேர்ந்த ராஜபாண்டி, பூதிப்புரத்தைச் சேர்ந்த பழனி ஆகிய ஆறு பேரைக் கைதுசெய்து அவர்களிடமிருந்து 1,410 ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது.
இது குறித்து வழக்குப் பதிந்த பழனிசெட்டிபட்டி காவல் துறையினர் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆறு பேரையும் கைதுசெய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர். மேலும் சம்பந்தப்பட்ட கிளப் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி பரிந்துரை செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுபோன்று தேனி மாவட்டத்தில் விதிமீறல், சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்படும் மனமகிழ் மன்ற உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என எச்சரிக்கை விடுத்துள்ளார்.